Monday 5 October 2015

அவசர அழைப்பு எண் 112

நாடு முழுவதும் அவசர அழைப்பு எண் 112: டிராய் பரிந்துரையை ஏற்றது மத்திய அரசு

இந்தியா முழுவதற்குமான அவசர அழைப்பு எண்ணாக டிராய் பரிந்துரை செய்த 112 எண்ணை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதனையடுத்து இந்த எண் விரைவில் நாடு முழுவதும் அறிமுகப் படுத்தப்பட உள்ளது. அமெரிக்காவில் எந்த ஒரு அவசர அழைப்பாக இருந்தாலும் 911, இங்கிலாந்தில் 999 போன்ற எண்களை அவசர உதவிக்காக செயல்படுத்தி வருகின்றன.
ஆனால் இந்தியாவில் தற்போது காவல்துறை உதவிக்கு 100, மருத்துவ உதவிக்கு 108, மேலும் 101, 102 என பல்வேறு எண்கள் அவசர கால அழைப்புகளுக்காக செயல்பட்டு வருகிறது.

இதைமாற்றி நாடு முழுவதும் அனைத்து அவசர அழைப்புகளுக்கும் எண் 112ஐ அறிமுகம் செய்யலாம் என தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. மேலும் செல்போனில் அழைப்பு வசதி நிறுத்தப்பட்டிருந்தாலும், வேறு வகையில் தடை செய்யப்பட்டிருந்தாலும், எந்த சூழலிலும் இந்த 112ஐ எண்ணை மட்டும் அழைக்கும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே டிராயின் பரிந்துரையை ஏற்று நாடு முழுவதும் விரைவில் அவசர கால உதவி அழைப்புக்கு எண் 112ஐ அழுத்தவும் என்ற அறிவிப்பு வெளியாகும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.