Sunday 1 November 2015

நிலத்தடி நீர்வளம்

நிலத்தடி நீர்வளம்



எந்த ஒரு நாடு என்றாலும், அங்கு நீர்வளம் இருந்தால்தான், பூமி செழிக்கும். மக்களின் வாழ்வும் வளம் பெறும். பொதுவாக மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் வன வளம் அதாவது, அடர்ந்த காடுகள் இருந்தால்தான் அங்கு மழை வளம் பெருகும். அந்த வகையில், தமிழ்நாட்டில் மிகுந்த முயற்சிக்கு பிறகு இப்போதுதான் 21 சதவீத வனப்பரப்பு இருக்கிறது.

தாமிரபரணி தவிர, வேறு எந்த ஆறும் தமிழ்நாட்டில் உருவெடுக்கவில்லை. அடுத்த மாநிலங்களில் இருந்துதான் ஓடிவருகிறது. அதனால்தான் அடுத்த மாநிலங்களை தண்ணீர் திறந்துவிடுங்கள் என்று கெஞ்சவேண்டிய நிலையில் இருக்கிறோம். ஆக, நமது மாநிலத்தில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், வாய்க்கல்களை நன்கு பராமரித்து, தண்ணீரை சேமித்து வைத்தால்தான், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முடியும்.

சமீபகாலங்களாக நிலத்தடி நீர்மட்டம் தமிழ்நாட்டில் வெகுவாக குறைந்துவருவது மிகவும் கவலை அளிக்கிறது. ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் சேமித்துவைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நீர் நிலைகளில் எல்லாம் தண்ணீரே தெரியாத அளவுக்கு ஆகாயத்தாமரை படர்ந்து இருக்கிறது. இந்த ஆகாயத்தாமரையால் எந்த வித பலனுமில்லை. பெருமளவு தண்ணீரை உறிஞ்சிவிடுகிறது. இந்த ஆகாயத்தாமரையை ஒழிப்பது என்பது எளிதில் முடியாது. மேலும், ஆகாயத்தாமரை நீர்நிலைகளையும் மேடாக்கிவிடும்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா இந்த ஆகாயத்தாமரையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இனி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்தான் அதை சிரமேற்கொண்டு செய்ய வேண்டும். அடுத்து அழிக்கப்படவேண்டியது சீமைக்கருவேல மரம். இது தமிழ்நாட்டில் பாரம்பரியமாக உள்ள மரம் அல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பு விறகுக்காக வெளிநாட்டில் இருந்து இந்த மரங்களின் விதைகளைக்கொண்டுவந்து போட்டார்கள். இன்று அனைத்து நீர்நிலைகளின் கரைகள் மட்டுமல்லாமல், நீர்நிலைகளுக்குள்ளும், பெரும்பாலான நிலப்பகுதிகளிலும் அடர்ந்த காடுபோல வளர்ந்து சுற்றுச்சூழலை கெடுத்துக்கொண்டு இருக்கிறது.

புவி வெப்பமயமாதலின் அபாயத்தைப்பற்றி உலகமே பேசுகிறது. ஆனால், புவி வெப்பமயமாதலுக்கு உதவும் கரமாக திகழ்வது இந்த சீமை கருவேலமரம்தான். மற்ற மரங்கள் கார்பன்–டை ஆக்சைடை தனக்குள் உறிஞ்சி, ஆக்சிஜனை பெருமளவில் வெளியிடும். ஆனால் இந்த சீமை கருவேலமரம் இதற்கு எதிர்பணிகளைச் செய்கிறது. நிலத்தடி நீரை அப்படியே டியூப் போட்டு உறிஞ்சுவதுபோல உறிஞ்சிவிடுகிறது. நிலத்தடி நீரை மட்டுமல்லாமல் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சிவிடுகிறது. இதன் இலை, காய், விதை போன்றவை எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. இந்த சீமை கருவேல மரத்தை அழிப்பதற்கும் அரசு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்து மீனவர்கள். கடலில் மீன்வளமும் குறைந்து, இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்படும் அபாயத்தில் உள்ள மீனவர்களுக்கு உள்நாட்டு மீன்பிடி தொழில் வாழ்வழிக்கலாம் என்றால், இப்போது நீர்நிலைகளில் பலுகி பெருகி உள்ள ஜிலேபி கெண்டை மீனால் அதற்கும் ஆபத்து வந்துள்ளது. அயிரை, உளுவை, விரால், விலாங்கு போன்ற பல மீன்களுக்கு இடையே ஆப்பிரிக்காவில் இருந்து 1952–ல் இறக்குமதி செய்யப்பட்ட ஜிலேபி கெண்டை மீன்களால் பாரம்பரிய மீன்கள் அழிந்துபோய்விடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஜிலேபி கெண்டையை பொதுவாக யாரும் சாப்பிடுவதில்லை. உரத்துக்குத்தான் போடுகிறார்கள். மற்ற மீன்கள் நீர்நிலைகளில் உள்ள பூச்சிகள், அழுக்குகள், தாவரங்களைச் சாப்பிட்டு வளரும்.

ஆனால், இந்த ஜிலேபி கெண்டை மீன்கள் மற்ற மீன்களின் முட்டைகளைத்தான் உணவாக சாப்பிடுவதால், விரைவில் மக்கள் சாப்பிடும் மற்ற மீன்வகைகள் இல்லாமலேயே போய்விடும் அபாயம் உள்ளது. எனவே, இந்த ஜிலேபி கெண்டை மீனையும் உடனடியாக அழிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப புதிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டிய அவசர அவசிய நிலையில் இருக்கும்போது, இப்போது இருக்கும் ஏரிகள், குளங்கள், கால்வாய்களிலேயே பெருமளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. உடனடியாக அனைத்து நீர்நிலைகளின் பரப்பளவு என்ன? என்பதை கணக்கிட்டு, அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றவேண்டும். மொத்தத்தில், ஆகாயத்தாமரை, சீமை கருவேலமரம், ஜிலேபி கெண்டை மீன், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு ஆகிய நான்கையும் அழித்தால்தான், நீர்வளம் குறிப்பாக நிலத்தடி நீர்மட்டம் பெருகும். விவசாயமும், மீன்வளமும் உயரும்.

நன்றி: தினத்தந்தி