Friday 25 December 2015

கல்வியை ஊக்குவிப்பதற்கான தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள்:

அண்ணல் காந்தி நினைவுப் பரிசுத்தொகை

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மதிப்பெண் பெறும் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவி, மேற்படிப்பினை தொடர இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு அண்ணல் காந்தியடிகளின் நினைவாக இப்பரிசுத் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பரிசுத்தொகை முதல் வருடத்திற்கு ரூ.1500 வீதமும், அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1000 வீதமும் வழங்கப்படுகிறது.

முதலமைச்சரின் தகுதிப் பரிசுகள்

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் /கிறுத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்களில் 15 மாணவிகளில் முதல் 1000 பேருக்கும் அவர்களது மேற்படிப்பை தொடர்ந்து படித்தால் ஆண்டு ஒன்றுக்கு ஒவ்வொருவருக்கும் ரூ.1500/- வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு தகுதிப்பரிசு வழங்கப்படுகிறது.

வெளிநாடு சென்று உயர் கல்வி பயில உதவித் தொகை

தற்போது ஆராய்ச்சி மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பு நிலையில் குறிப்பாக பொறியியல்,தொழிற்நுட்பவியல் மற்றும் அறிவியல் போன்ற துறைகளில் வெளிநாடு சென்று மேற்படிப்பைத் தொடர இளைஞர்கள் விரும்புகின்றனர். அவர்களது விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில் இந்த உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் பயன்பெற விரும்பும் பணியிலுள்ள மாணவ / மாணவியர் அல்லது அவரின் பெற்றோர் / பாதுகாவலரின் மாத வருமானம் ரூ.12,000க்கு மிகாமலிருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் இக்கல்வி உதவித்தொகை பெற 2 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பிஎச்.டி. மாணவர்களுக்கு அரசு உதவித் தொகை

பிஎச்.டி. பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது.
இந்த உதவித் தொகையைப் பெறுவதற்கு, ஒரு மாணவர் அரசு அல்லது அரசு உதவித் தொகைப் பெறும் கல்லூரியில் பிஎச்.டி. பதிவு செய்திருக்க வேண்டும். ஒன்று முதல் 3 ஆண்டுகள் வரை இருக்கலாம். எம்.பில். முடித்தவராக இருக்க வேண்டியது அவசியம்.
முதுகலைப் பட்டப்படிப்பில் 60 மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேறு எந்த கல்வி உதவித் தொகையும் பெறாத மாணவராகவும் இருக்க வேண்டும்.
பகுதி நேரமாக பிஎச்.டி. பயிலும் மாணவருக்கு இந்த உதவித் தொகை தரப்படமாட்டாது.
ஒவ்வொரு ஆண்டும் மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு உதவித் தொகை பெறும் 60 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 உதவி¦த் தாகையாக வழங்கப்படும்.

தூய்மைப் பணி புரிவோரின் குழந்தைகளுக்கு உதவித் தொகை

தூய்மைப் பணி புரிவோரின் குழந்தைகளுக்கு 10 ஆம் வகுப்பு வரை படிப்பிற்கான (ப்ரீமெட்ரிக்மைய அரசின் உதவித் தொகைத் திட்டம்.
தூய்மைப் பணி புரிவோரின் குழந்தைகளுக்கு அவர்களது சாதி,மதம் மற்றும் பெற்றோரின் வருமான வரம்பினைக் கணக்கில் கொள்ளாமல் கீழ்க்காணும் விகிதத்தில் உதவித்தொகை மற்றும் தனிமானியம் வழங்கப்படுகிறது.
உதவித் தொகை:
1-ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.110/- (விடுதியில் தங்காது பயிலும் மாணவ/ மாணவியருக்கு)
3-ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.700/- (விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ/ மாணவியருக்கு)
தனி மானியம்
விடுதியில் தங்காது பயிலும் மாணவ / மாணவியர்க்கு ஆண்டுக்கு ரூ.750/-
விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ / மாணவியர்க்கு ஆண்டுக்கு ரூ.1000/-
வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் சிறப்பு உதவித் தொகை திட்டம் (போஸ்ட்-மெட்ரிக்)
10ம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பிற்கான (போஸ்ட்-மெட்ரிக்) தமிழக அரசின் சிறப்பு உதவித் தொகை திட்டம்
மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற இயலாத கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவ / மாணவியர்க்கு 10ம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பிற்காக (போஸ்ட்-மெட்ரிக்) சிறப்பு உதவித்தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இதன்படி விடுதியில் தங்காது 10ம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பு பயிலும் மாணவ / மாணவியர்க்கு மாதம் ஒன்றிற்கு ரூ.65 முதல் ரூ.125 வரையில் பராமரிப்புப்படி மற்றும் கட்டாயக் கட்டணங்கள், படிப்புக்கு ஏற்றவாறு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
விடுதியில் தங்கி கல்வி பயில்பவராக இருப்பின் மாதம் ஒன்றிற்கு ரூ.115 முதல் ரூ.280வரையில் படிப்பிற்கு ஏற்றவாறு இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேலும், இவ்வுதவித் திட்டத்தின் கீழ், தொழிற் பயிற்சி மற்றும் இதர பயிற்சிகள் பெற 10ம் வகுப்பு தேர்ச்சி தேவையில்லாத இனங்களும் போஸ்ட் மெட்ரிக் படிப்பாகக் கருதப்பட்டு, அதற்குரிய உதவித்தொகை வழங்கப்படுகிறது. மத்திய  அரசு மற்றும் தமிழக அரசின் இக்கல்வி உதவித் தொகைகள் அந்தந்த கல்வி நிறுவனத்தின் மூலமாக மாணவ / மாணவியர்க்கு வழங்கப்படுகிறது.

தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி:

அரசு கல்லூரிகளில் பயிலும் தாழ்த்தப்பட்ட/பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சார்ந்த மாணவர்களில் குறிப்பாக பின்தங்கிய பகுதிகளிலிருந்து வரும் மாணவர்கள் பல்கலைக்கழகத் தேர்வில் ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் தேர்ச்சி பெறுவதில் மிகவும் சிரமப்படுகின்றனர். இத்தகையமாணவர்கள் மேற்கண்ட பாடங்களில் முழுமையான அளவில் தேர்ச்சி அடையச் செய்வதற்காக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள்-விவசாயிகள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டம்

இத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற விவசாயத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு:
மாணவர்களுக்கு ரூ.1250
மாணவிகளுக்கு ரூ.1500
பிளஸ் 2:
மாணவர்களுக்கு ரூ.1750
மாணவிகளுக்கு ரூ. 2000

தமிழ் வழி பயிலும் மாணவ, மாணவியருக்கு ஊக்கத் தொகை

தமிழ் வழியாக கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களை ஊக்குவிப்பதற்காக தமிழ் வழிக் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் 1971-72ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தமிழ் வழி கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் ஆண்டுக்கு 400 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

பெரியார் ஈ.வெ.ரா. நாகம்மை இலவச படிப்பு திட்டம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு பயில விரும்பும் ஏழை மாணவிகளில் நலனைக் காப்பதற்காகவும் பட்ட மேற்படிப்பில் இலவச கல்வியை பெறுவதற்காகவும் பெரியார் ஈ.வெ.ரா. நாகம்மை திட்டம் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு 2007-2008ஆம் ஆண்டு முதல் வழங்க ஆணையிடப்பட்டது.
இக்கல்வியாண்டிலிருந்து இத்திட்டத்தின் கீழ் பயன் பெறும் மாணவியரின் பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு 24 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவி

இத்திட்டத்தின் கீழ் துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அவர்களது சாதி,மதம் மற்றும் வருமான வரம்பினை கணக்கில் கொள்ளாமல் உதவித்தொகை வழங்கப்படுகிறது. விடுதியில் தங்காது பயிலும் மாணவ, மாணவியர்க்கு மாதம் ஒன்றிற்கு முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 40 ரூபாயும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 60 ரூபாயும், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பிற்கு 75 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விடுதியில் தங்கிப் படிப்பவர்களுக்கு மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் மாதம் 300 ரூபாயும்,  ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு படிப்பவர்களுக்கு மாதம் 375 ரூபாயும் வழங்கப்படுகிறது. தனி மானியமாக விடுதியில் தங்காமல் படிக்கும் மாணவ, மாணவியர்க்கு ஆண்டுக்கு 550 ரூபாயும், விடுதியில் தங்கிப் படிப்பவர்களுக்கு 600 ரூபாயும் வழங்கப்படுகிறது.

தமிழ் முதல் மொழிப் பாடம்: மாணவர்களுக்கான கல்வி ஊக்கத் தொகை

திறமை மிக்க மாணவர்கள் மேற்படிப்பைத் தொடர ஊக்குவிக்கும் வகையில் அரசு இத்திட்டத்தைக் அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்படி மாநில அளவில் தமிழை முதல் மொழிப்பாடமாகப் படித்து பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெறும் அரசு, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் பரிசுத் தொகை:
முதலிடம் ரூ.15,000
இரண்டாமிடம் ரூ.12,00
மூன்றாமிடம் ரூ.10,000
அதே போன்று, மாநில அளவில் தமிழை முதல் மொழிப் பாடமாக படித்து முதன் மூன்று இடங்களைப் பெறும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்படும் பரிசுத்தொகை:
முதலிடம் ரூ.7500
இரண்டாமிடம் ரூ.6000
மூன்றாமிடம் ரூ.5000
மேலும் மேல்நிலைத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மூன்று வகை (அரசுப்பள்ளி-1, நிதியுதவி பெறும் பள்ளி-1, ஆங்கிலோ இந்தியன், மெட்ரிகுலேசன், சுயநிதி பள்ளி ஆகிய மூன்றும் சேர்ந்து-1) பள்ளி மாணவர்களின் மேற்கல்விக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கிறது.
மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மூன்று வகை (அரசுப்பள்ளி-1, நிதியுதவி பெறும் பள்ளி-1, ஆங்கிலோ இந்தியன், மெட்ரிகுலேசன், சுயநிதி பள்ளி ஆகிய மூன்றும் சேர்ந்து-1) பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் மேற்கல்விக்காக ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
இதுதவிர, மேல்நிலைத் தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பெறும் மாணவர்களின் மேற்கல்விக்கான முழு செலவையும் மாநில அரசே ஏற்கிறது. பாடவரியாக மாநிலத்தில் முதலிடம் பெறும் பத்தாம் மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அரசு நிர்ணயிக்கும் விகிதத்தில் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்:

வேறு குழந்தைகள் இல்லாமல் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ள குடும்பங்களில் பெற்றோரில் எவரேனும் ஒருவர் 35 வயதுக்கு முன்னதாக குடும்பக் கட்டுபாட்டு அறுவைச் சிகிச்சை செய்திருந்தால், குழந்தையின் பெயரில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை மேம்பாட்டு நிறுவனத்தில் அரசு ரூ,22 ஆயிரத்து 200 டெபாசிட் செய்யும்.
டெபாசிட் செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்தாண்டு முதல் கிடைக்கும் வட்டித் தொகையில் இருந்து மாதம் ஒன்றுக்கு நூற்று ஐம்பது ரூபாய் அந்த பெண் குழந்தை கல்வி பயில்வதற்காக வழங்கப்படுகிறது. இருபதாம் ஆண்டில் முழுமையாக வட்டியுடன் கூடிய முதிர்வுத் தொகை அப்பெண்ணின் மேற்படிப்பு மற்றும் திருமண செலவிற்கு உதவும் வகையில் வழங்கப்படும்.
இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருந்து ஆண் குழந்தை இல்லாத குடும்பங்களில் அப்பெண் குழந்தைகள் ஒவ்வொருவரின் பெயரிலும் தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் தலா ரூ.15 ஆயிரத்து 200 டெபாசிட் செய்யப்படும். இத்தொகையிலிருந்து கிடைக்கும் வட்டியை கொண்டு டெபாசிட் செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்தாம் ஆண்டு முதல் அப்பெண் குழந்தைகள் கல்வி பயில ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ.150 வழங்கப்படுகிறது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியுடன் கூடிய முதிர்வுத் தொகை முழுமையாக ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். அது, அந்த குழந்தையின் மேற்படிப்பு மற்றும் திருமணச் செலவுக்கு உதவும்.

தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை:

தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழக அரசு தொழிலாளர் நலத்துறை மூலம் வழங்கும் கல்வி உதவித் தொகை (ஆண்டுக்கு):
இளங்கலை மருத்துவப் பட்டப்படிப்பு ரூ.2400
இளங்கலை பொறியியல் பட்டப் படிப்பு ரூ.2400
இளங்கலை சட்டப் பட்டப் படிப்பு ரூ.2400
இளங்கலை விவசாயப் பட்டப் படிப்பு ரூ.2400
தொழிற் பயிற்சி கல்வி ரூ.1000
மேல்நிலைக் கல்வி ரூ.1200
பொறியியல் பட்டயக் கல்வி ரூ.1440
மருத்துவ பட்டயக் கல்வி ரூ.1440
கல்வி ஊக்கத் தொகை:
ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாயும், இரண்டாம் மதிப்பெண் பெறும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஐநூறு ரூபாயும் ஊக்கத் தொகையாக தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தால் வழங்கப்பட்டு வருகிறது.
புத்தக உதவித்தொகை:
தொழிலாளர் நல வாரியம் 154 தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.68 ஆயிரத்து 360 புத்தக உதவித் தொகையாக வழங்கியுள்ளது. இது தவிர, 17 தொழிலாளர்களின் குழந்தைகள் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி பெற ஐந்தாயிரத்து 355 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி:
தொழிலாளர்களும், அவர்களைச் சார்ந்தோறும் அடிப்படைக் கம்ப்யூட்டர் பயிற்சி பெற ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கு 5 பேர் வீதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.