Tuesday 8 November 2016

இன்று (செவ்வாய்) இரவு 12.00 மணி முதல் 500 மற்றும் 1,000 ரூபாய் 
நோட்டுகள் செல்லாது

நாட்டுமக்களுக்கு பிரதமர் ஆற்றிய சிறப்பு தொலைக்காட்சி உரையில் அவர் இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், ''நாடு முழுதும் நவம்பர் 9 மற்றும் 10 முதல் ஏ.டி.எம்.கள் செயல்படாது என்றும் பிரதமர் அறிவித்துள்ளார். டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ஒப்படைத்து மாற்றிக் கொள்ளலாம். ஒப்படைக்க அடையாள அட்டை அவசியம்'' என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.

“கருப்புப் பணம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருந்து வருகிறது. ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள்தான் கருப்புப் பணத்தில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதிகள் கள்ள நோட்டுகளை அடித்து விநியோகித்து வருகின்றனர். ஊழல், கருப்புப் பணம், பயங்கரவாதம் நாட்டின் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியின் குறுக்கே நிற்கிறது” என்றார் பிரதமர் மோடி.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு: 

* ரூ.500, ரூ.1000 நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இதற்கு உரிய அடையாள அட்டை காண்பிக்க வேண்டும், உதாரணமாக ஆதார், பான் கார்டு, வாக்காளர் அட்டை ஆகியவற்றை காண்பித்து பணமாற்றம் செய்து கொள்ளலாம்.
* டிசம்பர் 30-ம் தேதிக்குள் பணத்தை மாற்ற முடியாதவர்கள் மத்திய ரிசர்வ் வங்கியில் டிக்ளரேஷன் ஒன்றை அளித்து மாற்றிக் கொள்ளலாம். இந்த வசதி மார்ச் 31, 2017 வரை உள்ளது. இதற்கும் அடையாள அட்டை அவசியம்.
* நாடு முழுதும் ஏடிஎம்.கள் நவம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் செயல்படாது. 

* பெட்ரோல் நிலையங்கள், அரசு மருத்துவ மனைகள், சர்வதேச விமான நிலையங்கள், ரயில் டிக்கெட்டுகள் ஆகியவற்றிற்காக ரூ.500, ரூ.1000 நோட்டுகளை நவம்பர் 11-ம் தேதி வரை பயன்படுத்தலாம்.
* சில நாட்களுக்கு ஏடிம்-லிருந்து ரூ.2000 மட்டுமே எடுக்க அனுமதி. இது பிற்பாடு ரூ.4,000 ஆக அதிகரிக்கப்படும்.வங்கி ஏடிஎம்-களிலிருந்து நாளொன்றுக்கு ரூ.10,000 வரை எடுக்க அனுமதி உண்டு, வாரத்திற்கு ரூ.20,000 வரை மட்டுமே வங்கி ஏடிஎம்களிலிருந்து பணம் எடுக்க முடியும்.
* இண்டெர் நெட் பேங்கிங், பணம், டிடி நடவடிக்கைகளில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை. 

* நாளை (நவ.9) வங்கிகள் செயல்படாது.
* புதிய ரூ.500 நோட்டுகளும், ரூ.2000 நோட்டுகளும் புழக்கத்திற்கு வரும்.

*நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கருப்புப் பணம், ஊழல் ஆகியவற்றிற்கு எதிராக போராட இது ஒரு வாய்ப்பு. இதுவரை பல்வேறு வழிமுறைகளில் ஊழல்வாதிகளிடமிருந்து ரூ.1,25,000 கோடி கருப்புப் பணத்தை மீட்டுள்ளோம்”

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். போதிய அளவில் மாற்று ரூபாய் நோட்டுகள் கையிருப்பு உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.